Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

1980.03.19 புதன்கிழமை
நெஞ்சம் மறப்பதில்லை


இன்று (2020.03.19) சரியாக நாற்பது ஆண்டுகள். நான்கு தசாப்தங்கள் உருண்டோடியும் இன்றுவரை நெஞ்சம் மறக்கவில்லை. அது ஒரு புதன்கிழமை. தேதி 1980.03.19. என் மத்ரஸஹ் கல்வியின் முதல் நாள். கொழும்பு மதீனத் அல்-இல்ம் மத்ரஸாவில் மாணவனாக சேர்ந்தது இந்த தினத்தில்தான். வருடந்தோறும் மார்ச் மாதம் வரும்போதெல்லாம் அந்த நாள் ஞாபகம் தவறாது வந்துவிடும்.

புனித அல்-குர்ஆன் மனன மாணவனாக மதீனத் அல்-இல்மில் நான் இணைந்துகொண்டேன். நான் இணைந்துகொண்டேன் என்பதைவிட எந்தன் பெற்றோர் என்னை இணைத்துவிட்டனர் என்றே கூற வேண்டும். அதுவே சரியானதும்கூட. எனது கல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வயதோ, முதிர்ச்சியோ அடைந்திராத வெறும் பத்தரை வயதினனாக அப்போது நானிருக்கிறேன். என்னை ஒரு ஹாபிலாக ஆக்க வேண்டும் என்கிற அவாவினால் உந்தப்பட்டிருந்த என் தாயும் தந்தையும் என்னை மதீனத் அல்-இல்மில் சேர்த்துவிட்டனர்.

என்னை ஹாபிலாக ஆக்க வேண்டுமென்ற எண்ணம் என் அருமைப் பெற்றோரின் இதயங்களில் கருக்கொண்டது இப்படித்தான். ஒவ்வொரு வருடமும் ரபீஉனில் அவ்வல் மாதத்தில் மாநபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த விழாக்கள் ஏனைய ஊர்களில் போல புத்தளத்திலும் பல இடங்களில் நடைபெறும். புத்தளத்தின் அத்தனை மீலாத் அல்-நபி விழாக்களுக்கும் கிரீடம் சூட்டினாற்போல் பழைய குத்பாப் பள்ளி வளவில் ஒரு பெரு விழா நடைபெறும். அக்காலத்து மீலாத் விழாக்களில் மிகப் பெரும்பாலும் இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆலிம்களே சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கைக்கு அழைக்கப்படுவர். இப்படி வருகை தரும் பேச்சாளர்கள் புத்தளம் பெரிய மீலாத் விழாவுக்கும் அழைக்கப்படுவர்.

1980ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் பிறந்திருந்தது. இவ்வருடம் புத்தளம் பெரிய மீலாத் மேடை சற்று வித்தியாசமாக அமைந்தது. கொழும்பு மதீனத் அல்-இல்ம் கல்லூரி ஹிப்ல் மாணவர்கள் சிலர் அந்த மேடையை அலங்கரித்தனர். அவர்கள் புனித அல்-குர்ஆனின் சில பகுதிகளை மேடையில் வைத்து மனனமாக ஓதிக்காட்டினர். மதீனத் அல்-இல்மின் அப்போதைய அதிபராகவிருந்த புத்தளம் நகரைச் சேர்ந்த மவ்லவி கே.வி.எல். அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் ஏற்பாட்டில் இவர்கள் வந்திருந்தனர். மேடையில் சிறப்புரை நிகழ்த்தி மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் விருந்துவைத்தவர் காயல்பட்டணம் அல்-மத்ரஸத் அல்-பாஸிய்யாவின் முதல்வர் ஐத்ரூஸ் ஆலிம் சாஹிப் (பாஸில், பாக்கவி) ஹழ்ரத் அவர்கள். அன்னார் தனது பேச்சில் அல்-குர்ஆனை மனனமிடுவதன் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அல்-குர்ஆனை மனனமிட்டோரின் மகிமை குறித்தும் எடுத்துரைத்தார். இந்தக் காட்சியும், நிகழ்வுகளும், சிறப்புரையில் சொல்லப்பட்ட விடயங்களும் என் அன்புத் தகப்பனாரின் மனதைத் தொட்டுவிட்டன.

தனது மூத்த மகன் அப்துல் நாஸரை ஹாபிலாக ஆக்கினால் என்ன? இப்படியொரு யோசனை என் தந்தை அவர்களின் சிந்தையில் முகிழ்ந்தது. அந்த யோசனையை என்னரும் அன்னையிடம் சொல்லிவிட்டார்கள். பின்னர் இருவரும் ஒத்துப் பேசி என்னை ஹாபிலாக ஆக்க மத்ரஸஹ் ஒன்றில் சேர்ப்பது நலம் என ஒருமித்த கருத்துக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து எனது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எந்த மத்ரஸாவில் அனுமதி கோருவதென யோசித்த என் பாசத்துக்குரிய பெற்றோர் மதீனத் அல்-இல்ம் மத்ரஸாவை மனங்கொண்டனர். இக்கல்லூரியின் அதிபர் மவ்லவி கே.வி.எல். அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களை என் தகப்பனார் தொடர்புகொண்டு எனக்கு மதீனத் அல்-இல்மில் அனுமதி கோரினார்கள். அவரும் அனுமதிக்கான தகுதி காணும் ஒழுங்குகளைச் செய்தார். பின்னர் அனுமதி கிடைத்தது. 1980.03.17 திங்கட்கிழமை புத்தளம் ஸாஹிரா பாடசாலையிலிருந்து விலகி 1980.03.19 புதன்கிழமை கொழும்பு மதீனத் அல்-இல்ம் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டேன். வெள்ளை நிற சட்டை, சாரம், தொப்பி அணிந்து மதீனத் அல்-இல்மின் மாணவனாக மாறினேன். இது என் மத்ரஸஹ் வாழ்வின் துவக்க நாள். மட்டுமல்லாமல் தலைநகருடனான எனது தொடர்பின் துவக்க நாளும்தான்.

என்னை மத்ரஸாவில் சேர்த்துவிட்டு கவலையுடன் வீடு திரும்பிய என் தந்தை, இத்துணை நாட்களாக தன்னுடன் ஒன்றாகவிருந்த மூத்த புதல்வன் வீட்டிலிருந்து தூரப்பட்டுபோன கவலையிலிருந்த என் தாய் இருவரும் அன்றைய தினம் நிறையவே அழுதுள்ளனர். இருவரும் அன்றிரவு சாப்பிடவும் இல்லை. பிற்பட்ட காலத்தில் இந்த விடயத்தை என் அன்னையார் சொல்லி தெரிந்துகொண்டேன்.

நான் மதீனத் அல்-இல்மில் சேர்ந்தது ஹிஜ்ரி ஆண்டு 1400இன் ஜுமாதல் ஊலா மாதத்தில். நான்கு மாதங்களில் ரமழான் விடுமுறை. கல்லூரியின் முதல்வர் கே.வி.எல். ஆலிம் சாஹிப் அந்த விடுமுறையோடு கடமையிலிருந்து நின்றுகொண்டார். 1980.03.19 அன்று மதீனத் அல்-இல்மில் நுழைந்த நான் 1984.04.21 அன்று அதிலிருந்து வெளியாகும்வரை பல அதிபர்களையும் ஆசிரியர்களையும் கண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். எல்லோரிடமிருந்தும் பல வகையான அறிவு, அனுபவங்கள் கிடைத்தன. இந்த அதிபர்கள், ஆசான்கள் சகலரையும் அவர்களின் தொண்டுகள் யாவற்றையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

மதீனத் அல்-இல்ம் மத்ரஸஹ் ஆரம்பம்முதல் நீண்ட நாட்களாக கொழும்பு பெரிய பள்ளியின் உட்பகுதியிலே இயங்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளியோடு இணைந்து தனியானதொரு கட்டிடத்தை அமைத்துக்கொண்டு இன்று அந்தக் கட்டிடத்தில் இயங்கிவருகின்றது. அடியேன் கற்ற 1980 முதல் 1984 வரையான காலப் பகுதி மதீனத் அல்-இல்ம் பெரிய பள்ளிவாசலின் உட்பகுதியில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியாகும். பள்ளியின் மூன்றாம் மாடியில் வகுப்புகளும், இரண்டாம் மாடியில் தங்குதலும், பள்ளிவாசலின் அருகே அமைந்துள்ள ஹமீதியா மண்டபத்தில் உணவருந்துவதற்கான ஏற்பாடும், அந்த மண்டபத்தை ஒட்டியதாக மலசலகூட மற்றும் குளியல் ஏற்பாடுகளும் என்றிருந்தன.

மதீனத் அல்-இல்ம் அதன் முதல் நாள்தொட்டு பல ஆண்டுகளாக கொழும்பு மெக்கி குழும தலைவரும் பிரபல தொழிலதிபருமான அல்-ஹாஜ் ருஷ்தி உவைஸ் அவர்களின் தனிப்பட்ட தயாளத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. நான் சேர்ந்ததும் இந்தக் காலப் பகுதியில்தான். மாணவர்களிடம் கட்டணம் அறவிடாத, நூறு வீதம் கொடைவள்ளல் அல்-ஹாஜ் ருஷ்தி உவைஸ் அவர்களின் அனுசரணையில் இயங்கிய இந்த மத்ரஸஹ் உண்மையில் அல்-குர்ஆன் மனனத்துக்கு அந்தக் காலத்தில் பேர் போன ஒரு கல்வி நிலையம். இலங்கையின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கே பயின்றனர். அத்தனை பேருக்கும் அனைத்தும் இலவசம்.

மதிப்புக்குரிய அல்-ஹாஜ் ருஷ்தி அவர்கள் தனது மத்ரஸஹ் மாணவர்களின் கல்வி மற்றும் உணவு விடயங்களில் அதீத ஆர்வம் கொண்டவர். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவார். வெள்ளிக்கிழமை ஜுமுஅஹ் தொழுகைக்காக பெரிய பள்ளிவாசலுக்கு வருவார். தொழுத பின் மாணவர்களைக் கண்டு கதைப்பார். முதலாவது அவர் விசாரிப்பது உணவு பற்றியும் சமையற்காரர் பற்றியும்தான். பாடங்கள், ஆசிரியர்கள் பற்றியெல்லாம் அதன் பிறகுதான். பெரிய மனசு படைத்த சீமான். அவர் மட்டுமல்ல அவரின் தந்தையாரும்தான். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தற்போதைய பிரமாண்டமான கட்டிடத்தின் முழுச் செலவும் அல்-ஹாஜ் ருஷ்தி அவர்களின் தந்தை அல்-ஹாஜ் உவைஸ் அவர்களுடையது. அன்னாரின் மகத்தான சேவையைக் கௌரவித்து, அவரை மக்கள் தினமும் நினைத்து அவருக்காக பிரார்த்திக்க வேண்டுமென்பதற்காக பிரதேச மக்கள் அன்னாரை பெரிய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர். தந்தை, தனயன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாவரினதும் மகிழ்ச்சியான, நிம்மதியான, சுகமான பெருவாழ்வுக்கும், ஈருலக நற்பாக்கியங்களுக்கும் அருள் நிறைந்த ரஹ்மானின் பேரருள் என்றென்றும் கிட்டட்டுமாக!

மதீனத் அல்-இல்மில் நான் சேர்ந்த முதல் நாளிலிருந்தே 'நான் உங்களின் ஊருக்கு மீலாத் விழாவுக்கு வந்தேன்' என சில மேல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் கூறலாயினர். பார்த்தால் அவர்கள்தான் 1980இல் பெரிய மீலாத் விழாவுக்கு கே.வி.எல். ஆலிம் சாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் புத்தளம் வந்த சகோதரர்கள். அப்துல் காலிக், பவாஸ், யுஸ்ரி என அவர்களை பெயர்களுடன் சொல்லிக்கொள்ளலாம். அப்துல் காலிக் என்பவர் இன்று தப்லீஃ ஜமாஅத்தின் முன்னணி ஆலிமாகத் திகழும் ஹாபில், மவ்லவி எம்.ஜே. அப்துல் காலிக் அவர்கள். பவாஸ் என்பவர் ஒருகொடவத்த ஹுமைதிய்யஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் ஹாபில், மவ்லவி எம்.என்.எம். பவாஸ் அவர்கள். யுஸ்ரி என்பவர் இலங்கையின் பிரபல காரி யுஸ்ரி ஸுபைர் அவர்கள்.

1980களில் மதீனத் அல்-இல்ம் ஹிப்ல் கற்கைநெறிக்கு ஓர் உத்தமமான கல்லூரியாக விளங்கியமை நல்லோரின் துஆ என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இக்காலப் பகுதியில் அக்கல்லூரியில் ஒரு சீரான நிருவாகம் தொடர்ந்திருக்கவில்லை. அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அடர்ந்து தொடர்ந்து மாறினர். இதனால் அடிக்கடி விடுமுறைகள். ஒரு முறையான நிருவாகம் இருந்திருப்பின் அல்லாஹ் உதவியால் மூன்று வருடங்களில் நிறைவுசெய்திருக்க முடியுமான ஹிப்ல் அல்-குர்ஆன் பாடநெறியை நான்கு வருடங்கள் எனக்கு இழுத்திருக்கத் தேவையில்லை. நிருவாக சிக்கல்கள் தொடர்ந்து ஏற்படுத்திய பாதிப்புகளுக்கிடையில் 1983.03.14 திங்கட்கிழமை ஒருவாறு புனித குர்ஆனை மனனம் செய்து முடித்தேன். புகழ் பூத்த ஆலிமும் நாடறிந்த பேச்சாளருமான மவ்லவி ஏ. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) ஹழ்ரத் அவர்களிடம் ஸுரத் அல்-ஜாஸியாவின் கடைசிப் பகுதியைப் பாடம் கொடுத்து குர்ஆன் மனனம் செய்வதை நிறைவுக்குக் கொண்டுவந்தேன். இனி மீட்டல் செய்ய வேண்டும். அந்தக் காலத்திலும் அதே கதைதான். மாறி மாறி வந்த உபாத்தியாயர்கள் மீண்டும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து மீட்டல் கொடுக்குமாறு கேட்டனர். இப்படி போராட்டத்தின் மத்தியில்தான் மீட்டல் வேலையையும் பூர்த்திசெய்தேன். 1984.04.19 வியாழக்கிழமை எனது திரு மறை மனன கற்கைநெறி பூர்த்தியடைந்தது. புகழ் யாவும் அல்லாஹ் தஆலாவுக்கே. இங்கே யாரையும் குறைகூறுவதற்கில்லை. எந்த ஒரு நிறுவனமும் சீராக இயங்க உருப்படியான முறைமை தேவை என்பதையே வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன். அல்லாஹ்வின் அருளால் 2000ஆம் ஆண்டின் பின்னர் மதீனத் அல்-இல்ம் நிருவாக ஸ்திரத்தன்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

நாற்பது வருடங்கள் வயதாகிய இந்த முக்கிய சங்கதியைப் பதிவுசெய்கின்ற இந்த அருமையான தருணத்தில் இதன் கதாநாயகர்களான எந்தன் அன்புக்கினிய பெற்றோரும் எம் மத்தியில் இல்லை. மதீனத் அல்-இல்ம் அனுமதியைப் பெற உதவிய கே.வி.எல். ஆலிம் சாஹிப் அவர்களும் எம்மிடையே இல்லை. மதீனத் அல்-இல்மில் எனக்கு உஸ்தாத்களாக இருந்தவர்களில் சிலரும் நம்மிடையே இல்லை. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் தஆலா அங்கீகரித்தருள்வானாக! அவர்களின் மண்ணறை வாழ்வை சுவனத்து சுகங்கள், இன்பங்களை அனுபவிக்கும் வாழ்வாக்கிவைப்பானாக!

என்னை ஹாபிலாக்கிவிட்ட மதீனத் அல்-இல்ம் கல்வி நிலையத்தை என் இறைவன் என்றும் உயர்த்திவைப்பானாக! அதில் தனது பரக்கத்தை தொடர்ந்து நீடித்துவைப்பானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.07.23
2020.03.19


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page