Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகள் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து ‘இஸ்லாமிய பொருளியல்’ எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. முஸ்லிம்கள் ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக் கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும் விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

குர்ஆனும் ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த கண்ணியமிக்க இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (பிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த மாபெரும் இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர். இபாதாத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக பிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர். வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முற்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் ஆய்வுகளும் கருத்துக்களும் தீர்ப்புக்களும் சட்டத்துறை நூல்களில் இடம்பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஓர் அறிவுத் துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப் பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.

நாளுக்கு நாள் நவீனமடைந்துவரும் உலகு அறிவுத்துறைகளிலும் புதுப் புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர் அறிவுத் துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப் பெரும் அறிவுத் துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். அது போன்றே இஸ்லாமிய சட்டத் துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக நாமம் சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத் துறையாக உருவம் பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை மீளக் கட்டியெழுப்பும் பொருட்டு முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்கவாரம்பித்தன. இத்தருணத்தில் இலாப நஷ்டத்தை மூலதனத்தின் விகிதத்திற்கேற்ப முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம்செய்துவைப்பதில் அக்காலை அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டியடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும் வட்டியடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம்செய்துவைத்தனர். அறிஞர்களான அன்வர் குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசியோராவர். பேரரிஞர் முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும் 1955இலும் 1957இலும் 1962இலும் இது தொடர்பில் அவர் எழுதினார். முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர் முஹம்மத் உஸைர் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அஹ்மத் அல்-நஜ்ஜார் ஆகியோர் யாத்த நூற்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.

இதுவரை காலமும் அறிஞர் பெருமக்களின் தனிநபர் சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது. இதன் ஓர் அங்கமாக இது பற்றி விவாதிக்கவென கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது. இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளியல் பற்றி மேலும் பேசவும் எழுதவும் உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது. பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண்டனில் நடைபெற்றது.

இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன. இவ்வகை வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank. பின்னர் 1975இல் Dubai Islamic Bank நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் குழுவொன்று இதனை நிறுவியது. பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும் சூடானிலும் அமையப்பெற்றது. இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance House ஐ உருவாக்கியது. தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸர்லேன்ட், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார் வங்கிகள் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1981ஆம் ஆண்டு பாகிஸ்தானும் ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம்செய்தன.

இஸ்லாமிய பொருளியல் உதயத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:

1. சுய அறிவுத் துறை
தனியான இஸ்லாமிய பொருளியல் நூல்களும் சஞ்சிகைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும் சுயமான அறிவுத் துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. வேறு பல சஞ்சிகைகள் இத்தலைப்பில் கட்டுரைகள் எழுதிவருகின்றன. பாரம்பரிய பொருளியல், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் பற்றி எழுதுகின்ற ஆய்வு சஞ்சிகைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்பொழுது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.

2. அறிவு முயற்சிகள்
பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறைக்கு அபார அறிவு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர் கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.

3. பல்கலைக்கழக கற்கைநெறிகள்
பல்வேறு சர்வகலாசாலைகளினதும் பெரும் கல்லூரிகளினதும் கற்கைநெறிகளில் ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளியல் பெற்றுள்ளது. மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும் இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளியல் சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டக் கற்கைநெறிகளை வழங்கிவருகின்றன. பாகிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப் படிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன. ஐக்கிய இராச்சியத்திலுள்ள Loughborugh University இத்துறையில் தனி நிகழ்ச்சியொன்றை தன் பாடவிதானத்தில் உட்புகுத்தியுள்ளது. லண்டனில் அமையப்பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்லோமா கற்கைநெறியொன்றை நடத்துகின்றது.

4. பல்கலைக்கழக ஆய்வுகள்
பெரும் எண்ணிக்கையிலான சர்வகலாசாலைகள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

5. இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்
இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் வருகையும் இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கீழ்; இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூற்களை இது வரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்துவரும் பிரிதொரு நிலையமாகும். அரபிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடாத்தியும் பணிபுரிந்துவருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டுவரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வோர் இதழும் பெரும்பாலும் இத்துறைசார் கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கற்பாலது.

6. இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்
இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூற்கள், முஸ்லிம் நிபுணர் தகவல் முறை, தொடர்பு வழி விபரக்கொத்து போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7. சட்டத் துறை நூற்கள்
இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத் துறை நூல்கள் வெளிவந்துள்ளமை பிரிதோர் அம்சமாகும். Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூல்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சு வெளியிட்டுள்ள பிக்ஹ் கலைக்களஞ்சியம் இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பில் இரு கலைக்களஞ்சியங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும் இஸ்தன்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

8. கணக்குப் பரிசோதனை தரங்கள்
இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர் அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை தரங்களை இஸ்லாமிய வங்கிகளுக்கும் முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூலொன்றை வெளியிட்டுள்ளது.

9. துறைஞர்கள் அமைப்பு
இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியலாளர்களைக் கொண்ட ஓர் அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஒழுங்குசெய்வதில் ஈடுபட்டுவருவதோடு, ஆய்வு சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டுவருகின்றது.

10. கருத்தரங்குகள், மாநாடுகள்
ஒவ்வொரு வருடமும் இத்துறைசார் கருத்தரங்குகளும் மாநாடுகளும் உலகலாவிய ரீதியில் ஒழுங்குசெய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.

11. இஸ்லாமிய வங்கி முறையும் முதலீடும்
இஸ்லாமிய பொருளியல் எண்ணக்கரு தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்றவண்ணம் இருக்கின்றன.

இஸ்லாமிய பொருளியலின் எண்ணக்கரு தோற்றம், அதற்கு உரு கொடுக்கப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை ஆராய்ந்த அதே வேளை இது பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும் உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடுசெய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும் தெஹ்ரானிலும் வொஷிங்டனிலும் ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும் 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப் பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும் சர்வகலாசாலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் நூல்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர். இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் சில குறை நிவர்த்திகளை வேண்டி நிற்கின்றன. அவையாவன:

1. குறுகிய பார்வை
இதுவரையும் இஸ்லாமிய பொருளியல் அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல் முராபஹஹ் லில்ஆமிரி பிஷ்ஷிராஃ, முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும் பேசப்பட்டும்வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில தனவந்தர்கள் மாத்திரம் வட்டி பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும் ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. ஆகவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழமையாக உள்வாங்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல தரத்தவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்பொழுது மாத்திரமே நிரூபிக்கப்படும்.

2. முறை பற்றிய குழப்பம்
இஸ்லாமிய பொருளியல் முற்றிலும் வித்தியாசமான தனிப் பெரும் தத்துவங்களையும் நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர் மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களைக் கொண்டு நடாத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான சகல ஊழியர்களும் பணிப்பாளர் சபையினரும்கூட இத்துறையில் போதிய ஞானமற்ற நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ள முகாமைத்துவத்திலுள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேளை பார்த்து அந்த சிந்தனைகளுடனும் பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அரைகுறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் ஒப்பந்தங்கள் பல. இதன் காரணமாக இத்தகைய ஒப்பந்தங்கள் பல பிழைகளை சுமந்தவண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சில போது நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர் இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும் பயிற்சியும் முஸ்லிம் அறிஞர்களால் பெற வேண்டியுள்ளனர்.

3. ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை
முராபஹஹ் லில்ஆமிரி பிஷ்ஷிராஃ, முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற ஒப்பந்தங்கள் சில பல வேளைகளில் ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர் ஒப்பந்தமும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதிசெய்தல் வேண்டும்.

4. அறிவூட்டல் போதாமை
இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் அறிவூட்டப்பட்டமை போதாத நிலையிலுள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ் லில்ஆமிரி பிஷ்ஷிராஃ, முஷாரக்கஹ், இஜாரஹ் போன்றவைகூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தைவிட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம்; என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களை அறிவூட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக தமது நிகழ்ச்சி நிரலில் ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

எந்தவொரு அறிவுத் துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை. இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கன்று. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல் தத்துவங்களில் பலவற்றுக்கு உரு கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறத்தொதுக்காது, அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில் ஒவ்வோர் ஒப்பந்தமும் நடைபெற வேண்டும்.


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page