Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


புன்னியங்கள் பூத்துக் குழுங்கும் புனித ரமழான் புறப்பட்டுவிட்டது. மீண்டும் அது எம்மைத் தரிசிக்க இன்னும் 11 திங்கள்கள் உள்ளன. இதற்கிடையில் யார் யாருக்கு எப்படி எப்படியோ? இறைவன் எழுத்தை யார்தான் அறிவார்? கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலன்களை அடக்கி, இரவு, பகல் பாராது பல்வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, பாவமன்னிப்புக் கோரி, தான தர்மங்கள் செய்து, ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை, பொருத்தத்தைப் பெற்றவர் உண்மையில் பெரும் பாக்கியசாலிதான்.

ரமழானின் இரவும் பகலும் இபாதத்களுடன், நற்கிரியைகளுடன் கழிந்தன. அதிலும் விசேடமாக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில் அதிக ஈடுபாடு. தேவைகள் நிறைவேற, பிரச்சினைகள் தீர, சிக்கல்கள் அவிழ, குறைகள் நீங்க என்றெல்லாம் தனக்காக, உற்றார் உறவினருக்காக, நாட்டுக்காக, சமூகத்துக்காக நிறைய நிறைய துஆக்கள்.

ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் துஆ இன்றியமையாதது. எதனையும் அல்லாஹ்விடம் கேட்பது அடிப்படையானது. சிருஷ்டிகளின் தேவைகளை சிருஷ்டிகர்த்தாவினால் மாத்திரம்தான் நிரப்பமாக நிறைவேற்றிவைக்க முடியும். தன் தேவைகளை தன்னையொத்த ஒரு சகாவிடம் சொல்லி முழுமையாக அடைந்துகொள்வது சாத்தியமற்றது. எனவேதான் அல்லாஹ் தன்னை இறைஞ்சும் படி பணித்தான். “நீர் கேட்டால் அல்லாஹ்விடம் கேட்பீராக! நீர் உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டு உதவி தேடுவீராக!” எனும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களது அறிவிப்பாக ஸுனன் அல்-திர்மிதியில் இடம்பெற்றுள்ள நாயக வாக்கியம் இதனையே தெளிவுபடுத்துகின்றது.

மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு வல்லவன் அல்லாஹ் பின்நிற்பதில்லை. அழைத்தால் அவன் விடையளிக்கத் தயார் நிலையில் இருக்கின்றான். பின்வரும் இறை வசனம் இது தொடர்பில் பேசுகின்றது:

“இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறியிருக்கிறான்: நீங்கள் என்னை அழையுங்கள்! நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.” (40 : 60)

பிரிதோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

“மேலும் (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாக இருக்கிறேன். அழைப்பாளரின் அழைப்புக்கு அவர் என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன் (என்று கூறுவீராக!)” (02 : 186)

அடியான் தன்னிடம் கேட்பதை அல்லாஹ் விரும்புகின்றான், எதிர்பார்க்கிறான். அவனிடம் கேட்காவிட்டால் அல்லாஹ் கோபமடைகின்றான். ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“எவர் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர் மீது அவன் சினம்கொள்கிறான்.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)

மனிதன் மனிதனிடம் கேட்கும்பொழுது அவன் கோபப்படுகிறான், வெறுப்படைகிறான், சீரிப் பாய்கிறான், ஓடி ஒழிக்கிறான், கதவுகளை அடைத்துக்கொள்கிறான். அல்லாஹ்வோ கருணை நிறைந்தவன். அடியார்களை இரக்கக் கண் கொண்டு பார்ப்பவன். தேவைகளை நிறைவேற்றிவைக்கும் பரம தயாளன்.

நம் கரங்கள் அல்லாஹ்வின்பால் மாத்திரமே உயர வேண்டும். மனிதர்களிடம் நம் தேவைகளுக்காக கை நீட்டுவது யாசகமாகும். வீடு வீடாக, கடை கடையாக தெரு வழியே வாசற்படி ஏறி தேவைகளைச் சொல்லி யாசிப்பதும் கௌரவமாக ஒருவரிடம் சென்று அமர்ந்து பேசி தேவைகளைச் சொல்வதும் யதார்த்தத்தில் ஒன்றுதான். யாசிப்பது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மனிதன் யாசகம்செய்ய ஆரம்பிக்கும்போதுதான் வறுமையின் வாயில் அவனுக்கு திறக்கப்படுகின்றது. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

“ஒரு மனிதர் யாசகத்தின் வாயிலைத் தன் மீது திறந்துகொண்டால் அல்லாஹ் அவர் மீது வறுமையின் வாயிலைத் திறந்திடுவான்.” (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா), நூல் : அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)

இன்னுமொரு ஹதீஸின் கருத்துப்படி மனிதர்களிடம் முன்வைக்கப்படும் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை.

“எவருக்கு ஒரு தேவை ஏற்பட்டு அவர் அதனை மனிதர்களிடம் முன்வைப்பாரோ அவரது தேவை நிறைவேற்றப்பட மாட்டாது. எவருக்கு ஒரு தேவை ஏற்பட்டு அவர் அதனை அல்லாஹ்விடம் முன்வைப்பாரோ அல்லாஹ் அவருக்கு உடனடியான அல்லது தாமதமான ரிஸ்கைக் கொடுப்பான்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)

அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் தோழர்களை எந்த ஒரு தேவையின்போதும் பிறரிடம் கை நீட்டாது அல்லாஹ்விடம் மாத்திரமே கையேந்தப் பயிற்றுவித்தார்கள். இதன் உச்ச கட்டமாக தனது சாட்டை கீழே விழுந்தாலும் அதனை அடுத்தவரிடம் எடுத்துத் தரும்படி கேட்காது தானே இறங்கி அதனை எடுத்துக்கொள்ள வேண்டுமென அபூ தர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களிடம் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உறுதி உடன்படிக்கை (பைஅத்) எடுத்திருந்தார்கள். (அறிவிப்பவர் : அபூ தர் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்னத் அஹ்மத்)

“ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் யாசகம் கேட்டு வந்தார். உமது வீட்டில் எதுவும் இல்லையா என நபியவர்கள் கேட்க ஒரு பகுதியை நாம் அணிந்துகொள்கின்ற, வேறொரு பகுதியை நாம் விரித்துக்கொள்கின்ற ஒரு போர்வையும் நாம் தண்ணீர் அருந்துகின்ற ஒரு பாத்திரமும் உள்ளது என்றார் அவர். அவ்விரண்டையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்கள் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

அவர் அவ்விரண்டையும் அவர்களிடம் கொண்டு வந்தார். தன் கரத்தினால் அவ்விரண்டையும் எடுத்து இவ்விரண்டையும் யார் வாங்கிக்கொள்வார் என அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். நான் அவ்விரண்டையும் ஒரு திர்ஹத்திற்கு வாங்கிக்கொள்கிறேன் என்றார் ஒரு மனிதர். ஒரு திர்ஹத்தைவிட அதிகப்படுத்துபவர் யார் என இரண்டு அல்லது மூன்று தடவைகள் நபியவர்கள் கேட்க இரண்டு திர்ஹங்களுக்கு நான் அவ்விரண்டையும் எடுத்துக்கொள்கின்றேன் என்றார் ஒரு மனிதர். அவருக்கு அவ்விரண்டையும் கொடுத்துவிட்டு இரு திர்ஹங்களைப் பெற்றுக்கொண்ட ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்விரண்டையும் அன்சாரி மனிதரிடம் கொடுத்து அவ்விரண்டில் ஒன்றைக் கொண்டு உணவு வாங்கி உம் குடும்பத்தவருக்குக் கொடுப்பீராக! மற்றதைக் கொண்டு ஒரு கோடரி வாங்கி என்னிடம் கொண்டு வருவீராக! என்றார்கள்.

அவர் நபியவர்களிடம் கோடரியைக் கொண்டு வந்தார். தனது கையினால் அதில் ஒரு கம்பைக் கட்டி (பிடி போட்டு) பின்னர் நீர் சென்று விறகு சேகரித்து விற்பீராக! பதினைந்து நாட்களுக்கு நான் உம்மைக் காணக் கூடாது என்றார்கள். அம்மனிதர் விறகு சேகரித்து விற்கலானார். பத்து திர்ஹங்கள் கிடைத்து அவற்றில் சிலதைக் கொண்டு ஆடையும் சிலவற்றைக் கொண்டு உணவும் வாங்கிய நிலையில் நபியவர்களிடம் வந்தார். யாசகம் மறுமை நாளில் உமது வதனத்தில் ஒரு புள்ளியாக வருவதைவிட இது உமக்கு சிறந்தது. நிச்சயமாக யாசகம் மூவருக்குத்தான் பொருந்தும்; பரம ஏழை, பளுவான கடன்காரர், கொலைக்கான நஷ்டயீட்டைச் சுமந்துகொண்டவர் என்றார்கள் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்)

தானே தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முயல வேண்டும். உழைத்து தானும் தன்னில் தங்கி வாழ்வோரும் சுயமாக வாழ்வை ஓட்ட வேண்டும். மற்றவரிடம் இரந்து வாழ்வது கூடாது. அப்படித்தான் பிறரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தாலும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கடனில் சிக்குண்டு பரிதவிக்கும் நிலையில், கொலைக்கான நஷ்டயீட்டைச் சுமந்துகொண்ட நிலையில் மாத்திரமே கேட்கலாம் என்பன போன்ற பல விபரங்கள் மேலே படித்த சம்பவத்தில் கிடைக்கின்றன.

இதனால்தான் இறைவனை இறைஞ்சுவதற்கு இஸ்லாத்தில் மிக முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. “துஆ அதுதான் இபாதத்” எனும் நுஃமான் இப்னு பஷீர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்த ஸுனன் அல்-திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸும் “துஆ இபாதத்தின் தூய பகுதி” எனும் அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் அறிவித்த ஸுனன் அல்-திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸும் இதனை விளக்க போதுமானவை.

அவ்வப்போது எமக்கு நேர்கின்ற தேவைகளை, பிரச்சினைகளை, சிக்கல்களை, கஷ்டங்களை, நஷ்டங்களை, துன்பங்களை, துயரங்களை, பிணிகளை வெட்கப்படாது, பயப்படாது மனந் திறந்து, வாய் திறந்து, அழுது சொல்வதற்கு ஈடிணையற்ற மகா கருணையாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்தான் நமக்கிருக்கின்றான்? ஆகவேதான் “துஆ முஃமினின் ஆயுதம்” என ஹதீஸில் வந்துள்ளது. (அறிவிப்பவர் : அலி (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

அல்லாஹ்வின் கருணைப் பார்வை நம்மை நோக்கி திரும்பியிருக்க துஆ அவசியத்திலும் அவசியம். அஃதின்றேல் அல்லாஹ் நம்மை கணக்கெடுக்கவும் மாட்டான். உலகலாவிய முஸ்லிம் சமூகத்தின் சில சமகால பின்னடைவுகளுக்கு துஆவில் அசிரத்தையை ஒரு பிரதான காரணமாகக் குறிப்பிடலாம். அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

“உங்கள் பிரார்த்தனை இல்லையென்றால் என்னுடைய இரட்சகன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான் என (நபியே!) கூறுவீராக!” (26 : 77)

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் ஸுஜூத் செய்வதிலிருந்து நம் சிரசுகளைப் பாதுகாத்துவருவது போல அவனைத் தவிர வேறு எவரிடமும் கேட்பதிலிருந்து எம் நாவுகளையும் கைகளையும் பாதுகாப்போம்! அலுத்துக்கொள்ளாது அனுதினமும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்!

2008.09.24


 

Copyright © 2011 - 2017 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page