Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

பிழையான அக்கீதாக்கள்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்

மடவளை பாசார் மதீனா தேசியப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 2005.06.11 ஆந் தேதி நடாத்தும் தேசிய ஆலிம்கள் ஒன்றுகூடல்.

நாட்டிலுள்ள அனைத்து ஆலிம்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தாபனரீதியான தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு இலக்கை நோக்கி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடங்கிய பயணத்துக்கு தஃவாப் பணியில் ஈடுபடும் சில சகோதரர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுச் சச்சரவுகளும், இஸ்லாமிய சகஜ வாழ்வுக்கு அவற்றால் ஏற்படும் பாரிய பாதிப்புக்களும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. நாளாந்த செயற்பாடுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை அலுவலகத்துக்கு வந்து குவியும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள், நேரடியாக வருகை தரும் தனிநபர்கள், குழுக்கள் கொண்டுவரும் பிரச்சினைகளில் அதிகமானவை கருத்து முரண்பாடுச் சச்சரவுகளுடன் தொடர்புடையனவாகவே இருக்கின்றன.

இரண்டாம் சிறுபான்மையினர் என்ற வகையில் இந் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமூக, கலாச்சார அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தை அதன் பொது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பையும் அவர்கள் சுமந்துள்ளனர் என்பது எல்லோராலும் உடன்படத் தக்க உண்மையாகும். அப்பொறுப்பை உணர்த்தும் இஸ்லாமியச் செய்தியை வீட்டுக்கு வீடு, இதயத்துக்கு இதயம் எடுத்துச் செல்லும் தாயீக்களும், தஃவா அமைப்புக்களும் அன்று அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர்களும் தொட்டுத் தொடங்கி விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொட்டுத் தொடங்கி நடத்திச் செல்கிறார்கள் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இந்நற்பணி உலகுள்ளளவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது இஸ்லாத்தின் பார்வையிலே ஒவ்வொரு தனி மனிதனும் நாளை மறுமையிலே அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமையுமாகும்.

இஸ்லாமிய சமூகத்து அங்கங்கள் ஒவ்வொன்றினதும் அன்றாட வாழ்வில் இஸ்லாம் முழுமையாக வரவேண்டும் என்ற வேணவா காரணமாக தன்னலம் கருதாது தாயீக்களாலும், தஃவா அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்படும் அக்கைங்கரியம் அவ்வப்போது குளிக்கச் சென்று சேற்றை அள்ளிப் பூசிக் கொண்ட கதையாக மாறுவது இந் நாட்களில் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாகிப் போய்விட்டது. தஃவாப் பணியில் ஈடுபட்டுள்ள சில தாஈக்கள், அவ்வப்போது கருத்து வேறுபாடுகளை தமக்கிடையே வளர்த்துக்கொண்டு வாதப் பிரதி வாதங்களிலும், கைகலப்புகளிலும் ஈடுபடுவதால் விழுமிய நாகரிகத்தை உலகுக்குக் காட்டிய புனித இஸ்லாம் கழங்கப் படுத்தப்படுவது ஒரு புறமிருக்க அவ் வெறுப்புணர்வுகள் தெளிந்த சிந்தனையற்றோரால் நெய்யூற்றி வளர்க்கப்படுவதன் காரணமாக கோஷ்டி மோதல்கள் வெடித்து அதன் பெறுபேறாக ஏற்படும் உயிர், உடமைச் சேதங்கள் இஸ்லாத்தை பலவீனப்படுத்தியும் வருகின்றன. இஸ்லாத்தின் பேரால் தமக்கிடையே போராட்டம் நடாத்தும் பிரிவுகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதோரிடம் நியாயம் கேட்டும், சமரசம் நாடாத்திவைக்கவும் நெருங்குவது இஸ்லாத்தை மேலும் மேலும் மலினப்படுத்துகிறது என்பதை போராடும் பிரிவுகள் எண்ணிப்பார்க்கத் தவறி விடுகின்றன.

இறுதி நபித்துவத்துக்கு சவால் விடுப்போராலும், இஸ்லாத்தின் அடிப்படையையே மாற்ற முயலும் விஷமிகளாலும் இஸ்லாத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு “கைரு உம்மத்” தமக்கிடையே உப பிரிவுக் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிளவுபட்டு இஸ்லாத்தைப் பலவீனப்படுத்தும் சக்திகள் வளர வழிவகுத்து நிற்கின்றன. கிடைக்கத்தக்க வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளும் நாளுக்கு நாள் புதுப் புது உத்திகளைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரச்சாரப் பணிகளைத் துரிதப்படுத்தியும், விரிவுபடுத்தியும் வருவதால் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய சவால்கள் பூதாகரமாக வளர்ந்து வருகின்றன.


நாட்டிலுள்ள அனைத்து ஆலிம்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தாபனரீதியான தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு இலக்கை நோக்கி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடங்கிய பயணத்துக்கு தஃவாப் பணியில் ஈடுபடும் சில சகோதரர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுச் சச்சரவுகளும், இஸ்லாமிய சகஜ வாழ்வுக்கு அவற்றால் ஏற்படும் பாரிய பாதிப்புக்களும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. நாளாந்த செயற்பாடுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை அலுவலகத்துக்கு வந்து குவியும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள், நேரடியாக வருகை தரும் தனிநபர்கள், குழுக்கள் கொண்டுவரும் பிரச்சினைகளில் அதிகமானவை கருத்து முரண்பாடுச் சச்சரவுகளுடன் தொடர்புடையனவாகவே இருக்கின்றன.

கருத்துத் திணிப்புக்கள், தமது கருத்துக்களுக்கு எதிராக வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்களை சகிப்புத் தன்மையுடன் செவிமடுத்து தமது கருத்துக்களை நளினமாக முன்வைப்பதற்குத் திறமையற்றுப்போய் மாற்றுக் கருத்துக்காரர்களைத் தாக்க முனைதல், இஸ்லாத்தின் உப பிரிவுகளை அடிப்படைக் கொள்கைகளுக்கு மேலாக வைத்து அதன் வழியில் மாற்றுக் கருத்துக்காரர்களை எள்ளி நகையாடல் போன்றவையே இப்பிரச்சினைகளுக்கு தலையாய காரணிகளாக இருக்கின்றன. “நீங்கள் மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள்” என யாருக்கு இஸ்லாம் சொல்லித் தந்ததோ அந்த சமூகம் அதில் பிளவுபட்டு, தமக்குள்ளேயே போராட்டம் நடாத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் விபரீதங்கள், அதன் காரணமாக இச்சமூகத்தை தேடிவரும் சோதனைகள் அதனால் ஏற்படும் வேதனைகள் என்பவற்றைப் பற்றியெல்லாம் யார் யாருக்குச் சொல்லித் தருவது என்பதுதான் இப்போதுள்ள பாரிய பிரச்சினை. நியாயங்கள், யதார்த்தங்கள் என்பன எல்லோராலும் சீரணிக்கக் கூடியன அல்ல. ஒரு சாரராருக்கு நியாயமாகப் படுவதும், எதார்த்தமாகப் படுவதும் மறு சாராருக்கு அநியாயமாகவும், முரண்பாடாகவும் அமைவது இயற்கையே. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு கருத்துப் பரிமாறல் அடிப்படையில் தீர்வொன்றைக் காணும் வழியைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தஃவாப் பணியில் ஈடுபடும் அமைப்புக்களும், தாயீக்களும் மேற்கொள்ளும் தன்னலமற்ற இறை பணியால் முன்னெப்போதைக்காட்டிலும் இஸ்லாமிய உணர்வுகள் குறிப்பாக இள நெஞ்சங்களில் வேரூண்றி வளரும் தருணத்தில் மறு புறம் அது தாபனங்களுக்கிடையிலான போட்டி பொறாமைகளை ஏற்படுத்தி வருவதை எண்ணி எண்ணி மனங் குமைந்து வேதனைப்படும் நிலையை விட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தருணம் இதுவெனக் கருதியதால் தேசிய ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ளது. கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவையாகும். அவை உலகுள்ளளவும் மனித குலத்துடன் ஒன்றித்து நிலைத்திருக்கும். “இன்னும் அவர்கள் (மனிதர்கள்) தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். (அவர்களில்) உமதிரட்சகன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே அவர்களைப் படைத்துமிருக்கிறான்.” ஏன அல்லாஹ் கூறுவதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே கருத்து முரண்பாடுகள் கைகலப்புகளில் முடிந்து சமூகத்தை மேலும் பலவீனப்படுத்தாதிருக்கும் வழிவகைகளை ஆராய தஃவாப் பணியில் ஈடுபடும் தாபனங்களையும், தாயீக்களையும், இதர ஆலிம்களையும் ஒன்றுகூட்டி தஃவா செயற்பாடுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இவ்வொன்றுகூடலால் முடியுமானால் அது ஒரு வரலாற்று முக்கியத்தவமிக்கதாக அமையும் என்பதில் ஜயமில்லை.

சகிப்புத் தன்மை, அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், முன்வைக்கும் மாற்றுக் கருத்துக்களை நளினமாக முன்வைத்தல், உட்பூசல்களைக் கைவிட்டு இஸ்லாத்தின் பொது எதிரிகளை எதிர்க்கத் தயாராகுதல் போன்ற அதி முக்கிய அம்சங்களில் தாயீக்கள், தஃவா அமைப்புக்கள் ஒருமனதான தீர்மானங்களை நிறைவேற்றுதல் இவ்வொன்றுகூடலின் இரண்டாவது முக்கிய அம்சமாகும். இம்முயற்சி வெற்றிபெறுவது முற்றாக ஆலிம்களின் கையிலேயே தங்கியுள்ளது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுதியாக நம்புகிறது.

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2005.06.10


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page