Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Translations

வாக்களிப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்


பாராளுமன்றத் தேர்தல் அண்மித்த நிலையில் முஸ்லிம்களின் சிந்தனைகளைத் தூண்டிவிடும் வகையில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த பேரறிஞரும், முஃப்தியுமான மர்ஹூம் முஹம்மத் ஷஃபீஃ அவர்களின் அல்-குர்ஆன் விரிவுரை ‘மஆரிஃப் அல்-குர்ஆன்’ இலிருந்து பின்வரும் பகுதி சிந்தனைக்கு விருந்தாக தமிழாக்கம் செய்யப்பட்டு தரப்படுகின்றது:

“நாடாளுமன்றங்களுக்கு, சபைகளுக்கு தான் தெரிவு செய்யப்பட வேண்டுமென வேண்டி நிற்கின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதும் சாட்சி சொல்வதாகும். இந்த சாட்சி கூறலில் தனது அறிவுக்கும், மதிப்பீட்டுக்கும் எட்டிய வரை குறித்த அபேட்சகர் அவரின் திறமை, தகைமை, நேர்மை, நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக வருவதற்கு தகுதியானவர் என வாக்காளர் சாட்சி சொல்கின்றார்.

இந்த சாட்சியம் உண்மையானதும் சரியானதுமென நிரூபணமாகக்கூடிய வகையில் எமது பிரதிநிதிகள் எத்தனை பேர் உள்ளனர் என சிந்தித்துப் பாருங்கள். எனினும், வெற்றிபெறுகின்ற அல்லது தோல்வியுறுகின்ற ஒரு விளையாட்டைப் போன்றே வாக்களிப்பதையும் பொது மக்கள் கருதுகின்றனர். வாக்குரிமை பணத்துக்கு விற்கப்படுகின்றது. அல்லது அழுத்தத்தின் கீழ் வாக்களிக்கப்படுகின்றது. அல்லது நம்பிக்கையற்ற நண்பர்களுக்கும் அற்ப வாக்குறுதிகளுக்கும் வீசி எறியப்படுகின்றது. நடைமுறை முஸ்லிம்கள்கூட தகுதியற்ற மக்களுக்கு வாக்களிக்கும்போது பொய் சாட்சியத்தைப் பதிவு செய்வதன் மூலம் அல்லாஹ்வின் சாபத்தையும் தண்டனையையும் வரவழைத்துக்கொள்கின்றோம் என்பதனை உணரத் தவறுகின்றனர்.

பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பதை அல்-குர்ஆனின் வழி நின்று வேறொரு வகையிலும் நோக்கலாம். இது ஷபாஅஹ் (சிபாரிசு) என அழைக்கப்படுகின்றது. அதாவது விருப்புக்குரிய வேட்பாளர் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட வேண்டுமென வாக்காளர் பரிந்துரை செய்கின்றார். இது தொடர்பிலான புனித அல்-குர்ஆனின் கட்டளை பின்வரும் வார்த்தைகளில் ஏலவே குறிப்பிடப்பட்டுள்ளது:

“எவரொருவர் ஒரு நல்ல சிபாரிசை செய்கின்றாரோ அவருக்கும் அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். எவரொருவர் ஒரு கெட்ட சிபாரிசை செய்கின்றாரோ அவருக்கும் அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும்.”

தன் சிபாரிசின் ஊடாக வெற்றிபெறுவதற்கு சாதகமாக தகுதியற்ற மோசமான ஒருவரை பரிந்து பேசுகின்ற மனிதனுக்கு அவர் சிபாரிசு செய்கின்ற நபரின் கெட்ட செயல்களிலிருந்து ஒரு பங்கு கிடைக்கும் என்பதே இதன் முடிவாகும். இத்தகைய ஓர் அபேட்சகர் தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் பிழையான அனுமதிக்கப்படாதவற்றை தொடர்ந்து செய்யும்போது அவர் புரியும் தீய செயல்களின் கேடு வாக்காளர் மீதும் இறங்கவே செய்யும்.

இஸ்லாமிய ஷரீஆவின் பார்வையில் வாக்குக்கு மூன்றாவது ஒரு நிலையும் இருக்கின்றது. அதாவது குரல் கொடுப்பவரை நியமித்தல் (வகாலஹ்). வாக்காளர் தன் சார்பான பிரதிநிதியாக அல்லது முகவராக வேட்பாளரை ஆக்குவது போன்று இது இருக்கின்றது. எனினும் இம்முகவர் நியமனம் அவரின் தனிப்பட்ட உரிமைகள் மேலும் இலாப நட்டத்தோடு சம்பந்தப்பட்டிருப்பின் தனிப்பட்ட முறையில் அவரே அதற்கு பொறுப்பாக இருப்பார். ஆனால், அந்நிலை இங்கு இல்லை. காரணம் இம்முகவர் நியமனம் முழு தேசமும் பகிர்ந்துகொள்கின்ற உரிமைகளுடன் தொடர்புறுகின்றது. ஆகவே ஒரு தகுதியற்ற அபேட்சகருக்கு தனது பிரதிநிதியாக வாக்களிப்பதன் மூலம் அவரின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தால் முழு தேசத்தின் உரிமைகளையும் தரைமட்டமாக்கிய பாவம் அவர் புயங்களில் ஆகும்.

சுருங்கக் கூறின் எமது வாக்கிற்கு மூவகை நிலைகள் உள்ளன. ஷஹாதஹ் (சாட்சி பகர்தல்), ஷபாஅஹ் (பரிந்து பேசல்), வகாலஹ் (பொது உரிமைகளில் குரல் கொடுப்பவர் அல்லது பிரதிநிதி நியமித்தல்). மூன்று நிலைகளிலும் ஒரு நல்ல தகுதியான மனிதனுக்கு வாக்களிப்பதானது வாக்காளர் அடைய வேண்டிய நன்மைகளை ஈட்டித் தருகின்றது. அது போன்றே தகுதியும் சன்மார்க்க நடைமுறையுமற்ற ஒருவருக்கு வாக்களிப்பதானது எல்லாமாக பொய் சாட்சியும் நியாயமற்ற சிபாரிசும் அனுமதிக்கப்படாத குரல் கொடுப்பவர் நியமனமுமாகும். இதன் தீய விளைவுகள் வாக்காளரின் கிரியைகள் பதிவேட்டில் பதிவு பெறும்.

எனவே வாக்களிப்பதற்கு முன் வாக்களிக்கப்படவுள்ள வேட்பாளரின் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அபேட்சகர் தகுதியானவர், திறமையுள்ளவர், நேர்மையானவர், வேறு வகையிலில்லாதவர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவும். பொடுபோக்கு, அசிரத்தை, கவனயீனம் இத்தகைய பெரும் குற்றங்கள் நடைபெற வழிவகுக்கும்.”

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
2004.03.24

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page