In the light of Wah'y :
(And when they hear the vain talk, they avoid it and say: our deeds are for us and your deeds are for you. Peace be on you. We do not seek the ignorant.” (28 : 55“
             
 


 Online Guests


Subscribe for Update


     Name:

Email:

        

 
 
                 
Articles

------------------------------------------------------------------------------------------------------------

பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)

  அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


ஒப்பனைகள் இல்லாத சகோதரத்துவத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி பறைசாற்றிய வண்ணம் உன்னத ஹஜ், உம்ரஹ் கிரியைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் இலட்சோப இலட்ச மக்களின் தக்பீர் புனிதத் தளங்களில் விண்ணதிர ஒலிக்க பாரினில் பட்டி தொட்டி எங்கும் வாழும் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கியவர்களாக ஈதுல் அழ்ஹாவை அகம் குளிர, முகம் மலர இன்று கொண்டாடுகின்றனர்.

ஹஜ் என்றாலோ, ஹஜ் பெருநாள் என்றாலோ நம் எல்லோரினதும் நினைவுக்கு வந்து நிற்பவர் நபிமார்களின் தந்தை இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள். முஸ்லிம்களின் நெஞ்சங்களிலே நீக்கமற நிலைத்து நிற்கும் அன்னார் உண்மையில் ஒரு வரலாற்று நாயகர் தான். அவர்களதும், அவர்களின் குடும்பத்தினதும் பெரும் தியாகத்தின் சுவடுகள், தடயங்கள் ஈற்றில் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களாய் பரிணமித்துள்ளன.

இறை வேதம் அல்-குர்ஆன் அடிக்கடி பேசுகின்ற இறைத் தூதர்களுள் ஸய்யிதுனா இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களும் குறிப்பிடத்தக்க ஒருவர். அன்னாரின் தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, குணாதிசயங்கள், தியாகம், தஃவாப் பணி, அதன் போது அவர்கள் சந்தித்த சொல்லொனா கஷ்ட நஷ்டங்கள், துன்ப துயரங்கள் பற்றியெல்லாம் புனித அல்-குர்ஆன் விலாவாரியாக எடுத்தியம்பியுள்ளது.

எத்தனை தடவைகள் இவ்வுயர் நபியின் சரிதத்தை திரும்பத் திரும்ப படித்தாலும் அலுப்புத் தட்டாது, சடைவு ஏற்படாது. ஓவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப் புது பாடங்களும், படிப்பினைகளும் கிடைத்துக்கொண்டுதானிருக்கின்றன.

சம காலத்தில் தன்னைப் போன்ற ஒரு நபியாகவிருந்த லூத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் சமூகத்தை அழித்து விடும் பொருட்டு அல்லாஹ்வின் உத்தரவுடன் வந்த மலக்மார்களுடன் நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் அக்கூட்டத்திற்காக மனந் திறந்து, வாய் திறந்து வாதிட்ட நிகழ்வை வல்லவன் அல்லாஹ் வான் மறையில் பதிந்து வைத்துள்ளான்.

“இப்ராஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி அவருக்கு நன்மாராயமும் வந்த போது லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம் செய்கிறார்.” (11 : 74)

அல்-குர்ஆனின் 29ஆம் அத்தியாயத்தின் 31, 32ஆம் வசனங்களும் இவ்விடயத்தை எடுத்தாளுகின்றன.

இறை நிராகரிப்பு, தன்னினச்சேர்க்கை என அழிக்கப்படுவதற்கான நியாயமான காரணங்கள் இருந்த போதிலும் நபி லூத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கூட்டத்தாருக்காக நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) மனமிரங்கியமை, தொடர்ந்து அவர்களுக்காக மலக்குகளுடன் வாதிட்டமை இங்கே நம் கவனத்தை ஈர்த்து நிற்கிறது.

ஒருவருக்கேற்படும் இடர் கண்டு அடுத்தவர் இரங்க வேண்டும். இது இஸ்லாத்தின் போதனை. இதில் உறவினர், உறவினரல்லாதார், நண்பர், பகைவர், வசதியுள்ளவர், வசதியில்லாதவர், அண்மையிலுள்ளோர், தொலைவிலுள்ளோர், தெரிந்தவர், தெரியாதவர் என பிரித்து நோக்க முடியாது. மனிதன் என்ற ஒரேயொரு அளவுகோல் தான் இங்கே செல்லுபடியாகும்.

தன்னை ஆழமான கிணற்றில் போட்டு தன் உயிருக்கே ஆபத்தேற்படும் வண்ணம் தனக்கு உபத்திரவம் செய்த தனது சொந்த சகோதரர்கள் தமது பிரதேசத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு தன்னிடம் தானியங்கள் வாங்க வந்த போது இதயம் கசிந்து தானியங்களைக் கொடுத்து, கூடவே அவர்கள் செலுத்திய கிரயத்தையும் அவர்கள் அறியாமல் பொதிகளுக்குள்ளே வைத்து அனுப்பிய நபி யூஸுப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் இனிய சம்பவம் கஷ்டத்தில் சிக்குண்டு அல்லலுறுவோருக்கு மனமிரங்கி உதவ வேண்டியதை போதித்துக்கொண்டிருக்கிறது.

ஏனையோர் தமது கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டி விட்டு விலகும் வரை தமது ஆடுகளுடன் ஒதுங்கி நின்றுகொண்டிருந்த நபி ஷுஐப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் இரு புதல்விகளின் நிலை கண்டு நெஞ்சு நெகிழ்ந்து அப்பெண்மணிகளின் ஆடுகளுக்கு நீர் புகட்டிய நபி மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் உதார சம்பவம் பலகீனருக்கு மனமிரங்கி உதவ வேண்டியதை உணர்த்திக்கொண்டிருக்கிறது.

ஏழைகள், அநாதைகள், விதவைகள், பலயீனர்கள், நோயாளிகள், கைதிகள், கடன்பட்டோர், புலனற்றோர், அங்கவீனர்கள், அகதிகள், நலிவுற்றோர், நாதியற்றோர், ஆதரவற்றோர், வீடற்றோர், காணியற்றோர் என எமது கவனத்துக்கும், கவனிப்புக்கும் உரித்தானோர் நமக்குள்ளே, நம்மைச் சுற்றி ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர். ஸக்காத் என்றும், சதக்கா என்றும் விதியாக்கப்பட்டுள்ளதன் பிரதான நோக்கங்களுள் நம் இதயங்கள் இத்யாதி மக்களுக்காக இலக வேண்டும், இரங்க வேண்டும், அவர்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

தேவைப்பட்டோருக்கும், இல்லாதோருக்கும், ஆதரவற்றோருக்கும் பரந்து விரிந்த மனதோடு உதவுவதை நன் மக்களின் பண்பாக அருளாளன் அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான். பின்வரும் அல்-குர்ஆனிய வசனம் இதனைத் தெளிவுபடுத்துகிறது:

“மேலும் அவன் (அல்லாஹ்) மீதுள்ள அன்பினால் ஏழைக்கும், அநாதைக்கும், கைதிக்கும் அவர்கள் (நல்லோர்கள்) உணவளிப்பார்கள்.” (76 : 08)

துன்பம், துயரம், அவலம், கஷ்டம், நஷ்டம், ஆபத்து, பிணி எவருக்கும், எப்படிப்பட்டவருக்கும் எந்நேரத்திலும் வரலாம். அவை சொல்லிக்கொண்டு, முன்னறிவிப்புச் செய்துகொண்டு வருவதில்லை. இவற்றினால் தாக்குண்டோர் தான் அவற்றின் தாக்கத்தை நன்கு புரிவர். இவ்வேளை உடைந்து போயுள்ள அவர்களுக்கு நான்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல, அவர்களின் கண்ணீரை துடைத்து விட, அவர்களை கைதூக்கி விட, அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு ஆளாக்கி விட சத்திய மார்க்கம் இஸ்லாம் எம்மைப் பணிக்கின்றது. ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பகன்றார்கள்:

“கைதியை விடுதலை செய்யுங்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள். பிணியுற்றவரை சேமம் விசாரியுங்கள்.” (அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழியல்லாஹு அன்ஹு), நூல் : சஹீஹ் அல்-புகாரி)

இறைத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வின் பணிப்புரை அல்-குர்ஆன் வாயிலாக இப்படி அமைந்திருந்தது:

“ஆகவே நீர் அநாதையை அடக்கி ஒடுக்காதீர்.” (93 : 09)

தந்தை அன்புக்காக ஏங்கித் தவிக்கும் அநாதைக்காக இரங்கி அதனை மனமார ஆதரித்து, அரவணைத்து, அன்பு காட்டி அதன் தேவைகளை நிறைவேற்றி வைப்பது நமது கடமையாகும். தந்தை இல்லாத தன்னை கருணைக் கண் கொண்டு பார்க்க எவருமில்லையே, எல்லோரும் என்னை ஓரக் கண் கொண்டு பார்க்கிறார்களே, கடிந்துகொள்கிறார்களே, அடக்கி வைக்கிறார்களே என எண்ணும் நிலைக்கு, அளவுக்கு ஓர் அநாதை தள்ளப்படக் கூடாது.

இடுக்கன் ஆட்கொண்டு நொந்து போயுள்ள உள்ளம் ஆறுதலை எதிர்பார்க்கின்றது. தேற்றுதலை அவாவுகிறது. தனக்கு கைகொடுத்து உதவ எவருமில்லையா என அங்கலாய்க்கிறது. வேதனையோடு வெதும்பிக்கொண்டிருக்கும் இம்மனிதர்களுக்காக ஒவ்வொருவரும் உளமிரங்கி மனம் சலிக்காது, முகம் சுளிக்காது உதவியாக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளை.

இடருக்குள்ளானவரின் இடரை அகற்றிவிட்டவர் மறுமையில் இடர் அகற்றப்படுவார். பின்வரும் நாயக வாக்கியம் இதற்கு சான்றாகும்:

“உலகக் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு முஃமினை விட்டும் எவர் அகற்றி விடுகிறாரோ மறுமை நாளின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுவான்.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), நூல் : சஹீஹு முஸ்லிம்)

இந்த யதார்த்தத்தை சரிவரப் புரிந்திருந்த உத்தம சஹாபிகள் அடுத்தவருக்காக எப்பொழுதும் தமது சொந்த நிலை பாராது இரங்குபவர்களாக இருந்தனர். அடுத்தவர் ஆபத்தை, துன்பத்தை, கஷ்டத்தை தமது ஆபத்தாக, துன்பமாக, கஷ்டமாகக் கருதினர்.

இரண்டாம் கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இரவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்ணுற்ற தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) காலையில் அவ்வீட்டுக்குச் சென்று பார்த்தார்கள். அதில் கண் பார்வையற்ற எழுந்து நடமாட முடியாத ஒரு வயது முதிர்ந்த மாது இருந்தாள். இரவு வந்தவரின் வருகை பற்றி அப்பெண்ணிடம் விசாரித்த போது அப்பெண்மணி இவ்வாறு பதிலளித்தாள்: “இவ்வளவு காலம் முதல் அவர் என்னைக் கவனித்து வருகிறார். என்னை சரி செய்து விடக்கூடியதை என்னிடம் கொண்டு வருகிறார். இன்னும் அசுத்தத்தை என்னை விட்டும் அகற்றி விடுகிறார்.”

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பேரரசர் அமீருல் முஃமினீன் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சியில் அமர்ந்து கொண்டும் தனிப்பட்ட வகையில் உதவி தேவைப்பட்டோர் குறித்து செலுத்திய அதீத கவனத்தையும், அபார கவனிப்பையும் மேற்படி சம்பவம் படம்பிடித்துக் காட்டுகின்றது.

துயருறுபவரைக் காணும் போது தன்னைப் போன்று பசியை, தாகத்தை, தூக்கத்தை, ஆசையை உணர்கின்ற ஒரு மனிதருக்குத் தானே துன்பம் பீடித்து அவரை இப்படி ஆட்டிப் படைக்கின்றது, தனக்கு இக்கதி நேர்ந்தால் எப்படி இருக்கும் என ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தால் இதயம் கசியும், இலகும், இரங்கும். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எதனைக் கொண்டு அவன் உம்மை சோதித்தானோ அதிலிருந்து அவனே எனக்கு ஆரோக்கியம் அளித்தான். மேலும் அவன் படைத்த பெரும்பாலானவற்றை விட அவனே என்னை சிறப்பாக்கி வைத்தான்.” எனும் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத்தந்துள்ள துஆவை ஓதி குறிப்பிட்ட பீடையிலிருந்து தன்னைக் காப்பாற்றி வைத்துள்ள வல்ல அல்லாஹ்வை வாயாரப் புகழ வேண்டும்.

துன்புற்றவருக்கு பெரு மனம் கொண்டு இரங்கி தன்னால் முடியுமான வரை கைகொடுத்துதவ வேண்டும் என கட்டளையிட்ட இஸ்லாம் பிறரின் துயரைக் கண்டு சந்தோஷப்படுவதையும் வன்மையாக தடுத்துள்ளது.

ஒருவர் துன்புற அதனைப் பார்த்து மற்றவர் இன்புற இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை. அது மனிதம் அல்ல. அல்லலுறுபவரைப் பார்த்ததும் யாருக்குத் தெரியும், நாளை ஒரு நாள் தனக்கும் இந்நிலை ஏற்படலாமே, எனக்கு இப்படி ஒரு பீடை நேரிட்டு மனிதர்கள் என்னைப் பார்த்து ஆனந்தமடைந்தால் எனக்கு எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மூட நம்பிக்கைகள், மௌட்டீகக் கொள்கைகள், படு பாதகச் செயல்கள், பொல்லாத பாவங்கள் தலைவிரித்தாடிய அஞ்ஞான யுகத்து அரபு மக்களிடையே சில சிறப்பான போற்றத்தக்க நல்ல குணங்களும் இருக்கவே செய்தன. என்ன தான் பகைமை வளர்ந்து முற்றி இருந்த போதிலும் தனது எதிரிக்கு ஒரு பீடை ஏற்படும் போது அதனைக் கண்டு அறியாமைக் காலத்து அரபு மனிதன் குதூகலிக்கவில்லை. இது மனிதாபிமானம் இல்லாதவர்கள், படிப்பறிவற்றவர்கள் என வரலாறு நெடுகிலும் வர்ணிக்கப்பட்டு வருகின்ற ஜாஹிலிய்யாக் கால மக்களிடம் குடி கொண்டிருந்த மெச்சத்தக்க பண்பு.

துன்பத்துக்குள்ளானவனைக் கண்டு அவனுக்காக இரக்கப்பட்டு அவன் இடுக்கன் துடைக்க முன்வர வேண்டியவன் அவனின் துன்பத்தைப் பார்த்து சந்தோஷப்படும் போது துன்பத்திலிருப்பவனை அதிலிருந்து காப்பாற்றி அதனைப் பார்த்து இன்புற்றவனை இறைவன் துன்பத்துக்குள்ளாக்குவான். பின்வரும் ஹதீஸ் இதனைச் சொல்லிக்கொண்டிருக்கிறது:

“உமது சகோதரருக்கு அவரின் இடுக்கன் குறித்து மகிழ்ச்சியை நீர் வெளிப்படுத்த வேண்டாம். அல்லாஹ் அவருக்கு கருணை காட்டி விட்டு உம்மை சோதிக்கலாம்.” (அறிவிப்பவர் : வாஸிலா இப்ன் அல்-அஸ்கஃ (ரழியல்லாஹு அன்ஹு), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)

மொத்தத்தில் அல்லலுறுபவருக்கு, அவதியுறுபவருக்கு நெஞ்சு நெகிழ்ந்து, பெரு மனதுடன் உதவிக் கரம் நீட்ட வேண்டுமே தவிர அவரின் துன்பத்தில் இன்பம் காணவோ, குளிர் காயவோ கூடாது. இதுவே இஸ்லாத்தின் தூய வழிகாட்டல். இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உட்பட சகல இறைத் தூதர்களும் பிறருக்காக இரங்கும் அன்பிதயம் கொண்டவர்களாகவிருந்தனர்.

நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தின் பக்கங்களை விசேடமாக தரிசிக்கும் சிறப்பான ஹஜ் காலப் பகுதியில் அன்னார் அடுத்தவருக்காக உளமிரங்கியதையும் கரிசனையுடன் படிப்போம்! எம்மையும் அந்த அச்சில் வார்த்தெடுப்போம்!


2009.11.18

     
COMMENTS
 
------------------------------------------------------------------------------------------------------------
  * இஸ்லாம் வலியுறுத்தும் ஜீவகாருண்யம்
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?

 
 
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© Ash-Shaikh Abdul Nazar