Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : மீண்டும் ஒரு மதீனா


ஆசிரியர் : ஆர்.எம். நிஸ்மி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸரின் ஆசிச் செய்தி


எல்லாமே சரியாகவும், நிரப்பமாகவும், சிறப்பாகவும் அமையப்பெற்ற கற்பனைப்பண்ணப்படுகின்ற ஒரு சமூக அமைப்பை “Utopia” என ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. முழுமையான இஸ்லாமிய வடிவம் தனி மனித வாழ்க்கையிலும், கூட்டு வாழ்க்கையிலும் அரசு முதல் அடுப்பங்கரை வரை உருப்பெற்றிருக்கும் ஒரு சமூக அமைப்பை “நபிகளார் காலத்து மதீனா” என அழைக்கலாம்.

இஸ்லாத்தின் போதனைகள் வெறும் கருத்தியலோ அல்லது காலத்துக்கு ஒவ்வாத சித்தாந்தமோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ, இடத்துக்கோ மாத்திரம் சொந்தமான வழிகாட்டல்களோ அல்ல. மனிதனின் இயல்போடு முற்றிலும் பொருந்திப் போகின்ற காலதேசவர்த்தமானத்துக்கேற்ற ஒப்பு உவமை அற்ற போதனைகள் அவை. மனித குலத்தை அமைதி, சுபிட்சத்தின் பால் இட்டுச்செல்பவை. இப்போதனைகள் நபிகளார் காலத்து மதீனாவாசிகள் மத்தியில் மனித வாழ்வின் சகல மட்டங்களிலும் அரசோச்சிய போது மதீனா மாநகரை முழு உலகும் புருவம் உயர்த்திப் பார்த்தது. வாய்விட்டு சிலாகித்தது. அமைதியும், நிம்மதியும் பட்டிதொட்டியெங்கும் வியாபிக்க, செங்கோலாட்சியின் கீழ் சுபிட்சம் நிறைந்த வாழ்வை மக்கள் வாழ்வாங்கு வாழ, வானமும், பு+மியும் பரக்கத்களை அள்ளி அள்ளிக் கொட்ட பார்ப்பவர் பொறாமைப்படும் அளவுக்கு மதீனத்து மண் அல்லாஹ்வின் அளவற்ற அருட்பாக்கியங்களை நேரடியாகவே அனுபவித்தது. இறையச்சம், நம்பிக்கை, நாணயம், நீதி, நேர்மை, உண்மை, வாய்மை, பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, பரிவு, மரியாதை போன்றவற்றின் பிரதிபிம்பமாய் விளங்கியது. உயிர்களும், உடமைகளும், உரிமைகளும், உணர்வுகளும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. மொத்தத்தில் ஒரு முன்மாதிரியான மாநகராக உலக வரலாற்றில் தடம் பதித்தது.

திசையறி கருவியைத் தவற விட்ட கப்பல் நடுக் கடலில் தத்தளிப்பது போல் நிம்மதியைத் தொலைத்து விட்டு அல்லல்படும் உலகு மீண்டும் அமைதி காண வேண்டுமாயின் நபிகளார் காலத்து மதீனாவை முன்மாதிரியாகக் கொண்ட கிராமங்களை, பட்டினங்களை, நகரங்களை, மாநகரங்களை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இப்பேருண்மையை நாவல் வடிவில் மக்கள் முன் வைக்கின்ற பணியே “மீண்டும் ஒரு மதீனா” எனும் இந்நூல். ஸன்ஆ எனும் ஒரு நகரை உருவகப்படுத்தி நபிகளார் காலத்து மதீனாவின் மறு உருவமாக காட்ட முயல்கின்றார் நூலாசிரியர். பௌதிகக் குணாதிசயங்களை மையமாகக்கொண்டு மாதிரிக் கிராமங்கள் பற்றி திட்ட வரைவுகள் செய்யப்படுகின்ற சமகாலத்தில் ஆன்மீகக் குணாதிசயங்களை மையமாகக்கொண்ட மாதிரிக் கிராமமொன்றுக்கான திட்ட வரைவாக நான் இந்நவீனத்தைப் பார்க்கிறேன். படித்துச் சுவைத்தும், செயலுருப்படுத்தியும் இந்நூல் மூலம் மக்கள் பயன்பெற ஆசிக்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக இப்பணியை அங்கீகரிக்க அவனைப் பிரார்த்திக்கிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
மன்னார் வீதி,
புத்தளம்.

1427.05.03
2006.05.31
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page