Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


இனிய இஸ்லாமிய ஷரீஆவின் அறிவுத் துறைகளை அரபு இலக்கண இலக்கியத் துறைகளுடன் இரண்டறக் கலந்து கல்வி வேட்கையுடன் கல்லூரி நாடி வரும் அன்பு மாணவ மணிகளுக்கு அறிவமுதமூட்டி, ஒழுக்க விழுமியங்களை வளர்த்து அறிவும் பண்பாடும் ஒருசேர கொடுக்கப்பட்ட சன்மார்க்க வழகாட்டிகளான ஆலிம்களை, புனித அல்-குர்ஆனை அகங்களில் சுமந்த ஹாஃபில்களை உருவாக்கும் அறப் பணியில் இரு தசாப்தங்களாய் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் இஹ்ஸானிய்யஹ் அரபுக் கலாசாலை தீவின் நாற்றிசைகளிலும் புகழ் பெற்ற ஓர் அறிவுப்பீடம். அதன் 20 ஆண்டு பூர்த்தி, இரண்டாவது பட்டமளிப்பு விழா என்பவற்றை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு மலரில் நான்கு வரிகள் உணர்ச்சி ததும்ப, மகிழ்ச்சி பொங்க எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.

சன்மார்க்க போதனைக்கு ஆலிம் பெருமக்களின் அதீத தேவை நன்கு உணரப்பட்ட ஒரு காலப் பகுதியில் இன்று போலல்லாது கொழும்பு மாநகர் ஒரேயொரு ஷரீஆ கலாபீடத்துடன் இருந்த வேளை நாடறிந்த பேச்சாளர், புகழ் பூத்த வேத போதகர் மவ்லவி எஸ். நியாஸ் முஹம்மத் ஹழ்ரத் அவர்களின் வேணவாவுடன், பெரு முயற்சியுடன் துவக்கிவைக்கப்பட்ட இஹ்ஸானிய்யஹ் இன்று சுமார் 250 மாணவர்களுடன், 19 ஆசிரியர்களுடன் ஒய்யாரமாய் அறப் பணி ஆற்றிவருவது அனைவருக்கும் இனிப்பானதே. நிதி நெருக்கடி, இட நெருக்கடி, வளப் பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியில் இதுகாறும் 114 ஆலிம்களையும் 232 அல்-குர்ஆன் ஹாஃபில்களையும் தீன் சேவைக்காக அவனிக்களித்திருப்பது வல்லவன் அல்லாஹ்வின் அள்ள அள்ளக் குறையாத அருள் இக்கலாசாலைக்கு தொடர்ந்திருப்பதை உணர்த்தப் போதுமானது.

குண்டும்குழியும், சேறும் சகதியும் நிறைந்த பாதையில் தடம்புரளாது, குடைசாயாது மிக அவதானமாய் வண்டியைச் செலுத்தும் சாரதியாய் குறித்த இலட்சியத்தைக் குறியாக வைத்து கல்லூரியைக் கொண்டு நடாத்தும் ஸ்தாபகப் பணிப்பாளர் மவ்லவி எஸ். நியாஸ் முஹம்மத், அவருடன் அணிதிரண்டு கல்விப் பணியில் கரிசனையுடன் கச்சிதமாய் ஈடுபட்டு இரவு பகல் பாராது, மாரி கோடை பொருட்படுத்தாது, கஷ்ட நஷ்டங்களை வெளிக்காட்டிக்கொள்ளாது உழைத்துவரும் உன்னத ஆசான்கள், கலாசாலை இயந்திரம் தடையின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க தமது கஜானாக்களிலிருந்து மனம் சலிக்காது, முகம் சுளிக்காது வாரி வாரி வழங்கிவரும் வள்ளல்கள் இத்தருனத்தில் நன்றிப் பெருக்குடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள், சமூகத்தின் பாராட்டுக்கும் பிரார்த்தனைக்கும் உரித்தானவர்கள்.

தலைநகரில் அமைந்திருந்த போதிலும் தலையாய தேவைகள் பல இன்னமும் இவ்வறிவுப்பீடத்துக்கு உள்ளன. அவை நிரப்பமாய் நிறைவேற்றப்பட்டு, இன்னும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மிகச் சிறந்த கல்வியை நல்கும் ஒரு பரிபூரண கலாநிலையமாக இஹ்ஸானிய்யஹ் மிளிர வேண்டும்! உலகம் உள்ளளவும் அது அறிவொளி பரப்ப வேண்டும்! அதன் உற்பத்திகள் மூலம் உலகு உச்ச பயன் அடைய வேண்டும்! அதன் வளர்ச்சிக்காக முழுமூச்சுடன் பாடுபடும் சகலருக்கும் இம்மை, மறுமை சௌபாக்கியங்கள் குறைவின்றி கிடைக்க வேண்டும்! இவை இச்சிறியவனின் அவாவும் துஆவும்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2008.05.20

 

Copyright © 2011 - 2017 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page