Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 - கி.பி. 2007


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் வாழ்த்துச் செய்தி


மீன்பாடும் தேன் நாடு மட்டு மாநகரில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூர் கிராமத்தில் பெண் கல்விக்காய் பிறந்த அல்-ஜாமிஅத் அல்-கைரிய்யஹ் ஒன்பதாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இன்பகரமான இத்தருணத்தில் தனது கன்னி பட்டமளிப்பு விழாவை தலைநிமிர்ந்து நின்று நடாத்துவது நம் அனைவரினதும் நெஞ்சங்களில் மகிழ்ச்சி ததும்பச் செய்கின்றது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை வரலாற்று ஆவணமாக்கி தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்திடச்செய்யும் நல்ல முயற்சியாக வெளியிட்டுவைக்கப்படும் நினைவு மலரில் எனக்கும் சில வரிகள் எழுதக் கிடைப்பது எந்தன் உள்ளத்தை பூரிப்படையச் செய்கிறது.

இந்து சமுத்திரத்தின் நித்திலம் இலங்கை திருநாட்டில் இஸ்லாமிய அறிவுத் துறைகளை அரபு மொழியை ஊடகமாகக் கொண்டு கற்பித்து வேத போதம் செய்கின்ற ஆலிம்களை உருவாக்கும் அறப்பணியில் ஈடுபடும் அரபுக் கல்லூரிகள் ஏறத்தாழ 150 உள்ளன. மாசற்ற சன்மார்க்கம் இஸ்லாத்தை மங்கையர் மத்தியில் துலாம்பரமாகவும் துல்லியமாகவும் முன்வைக்கும் பொருட்டு நாட்டின் நாலா பகுதிகளிலும் நன்குணரப்பட்டு பெண்களுக்கான அரபு மத்ரஸாக்கள் அண்மைக் காலமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. இவ்வரிசையில் 1999ஆம் ஆண்டு இணைந்துகொண்ட அல்-ஜாமிஅத் அல்-கைரிய்யஹ் 02 ஹாஃபிலாக்களையும், 13 ஆலிமாக்களையும் இப்பட்டமளிப்பு விழாவின்போது சமயப் பணிக்காய் சமூகத்திடம் சமர்ப்பிக்கின்றது.

இஸ்லாமிய எழுச்சி அன்றும், இன்றும், என்றும் ஆண்களுடன் பெண்களின் துணையுடன் ஏற்பட்டது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அறிவு என்றால் மார்க்கம், மார்க்கம் என்றால் அறிவு எனும் அளவிற்கு கல்வியை அடிப்படையானதொன்றாக ஆக்கியது புனித இஸ்லாம். ஆகவே இஸ்லாமிய மறுமலர்ச்சி என்றும் அறிவுடன் பின்னிப்பிணைந்தது. நுபுவ்வத் காலம் முதல் இதுவரை முஸ்லிம் பெண்மணிகள் இஸ்லாமிய எழுச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனரென்றால் அறிவு ஞானமின்றி அது சாத்தியப்பட்டிருக்காது என்பது எளிய உண்மையும் இலகுவில் புத்திக்குப் புலப்படக்கூடியதுமாகும். ஈழத் தாய்நாடு நாளாந்தம் கண்டுவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி நம் பெண்களின் பங்களிப்பையும் பெற்று வருகிறது. அதிலும் விசேடமாக அரபு மத்ரஸாக்களின் உற்பத்திகளான ஆலிமாக்களின் வகிபங்கு உன்னதமானது. இப்பின்னணியிலேயே அல்-ஜாமிஅத் அல்-கைரிய்யாவையும் அதன் இன்றைய, எதிர்கால உற்பத்திகளையும் அவாவுடனும் துஆவுடனும் பார்க்கின்றேன்.

நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளுடன், 08 ஆசிரியர்களுடன் சிறப்பாக இயங்கிவரும் அல்-ஜாமிஅத் அல்-கைரிய்யஹ் தரமான ஹாஃபிலாக்களையும், ஆலிமாக்களையும் தரணிக்குத் தரும்வண்ணம் தூய எண்ணத்துடன், தியாக சிந்தையுடன் பாடுபட்டு உழைக்கும் நிருவாகிகள், அதிபர், ஆசிரியர்கள் என்றும் எல்லோரினதும் பாராட்டுக்கும் நன்றிக்கும் துஆவுக்கும் உரித்தானவர்கள். தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் கடந்த எட்டு வருடங்களாய் அதீத பிரயாசையுடன் இயந்திரமாய் இயங்கியதன் பயனாக இக்கல்லூரி முதல் பட்டமளிப்பு விழாவை காண்கிறது. முயற்சியின் பலனை கண் முன்னே அனுபவிக்கக் கிடைப்பது இக்கனவான்களைப் பொருத்த மட்டில் நிச்சயம் ஆத்ம திருப்திதான். இவர்களின் களிப்பில் அடியேனும் இணைந்துகொள்கிறேன்.

அல்-ஜாமிஅத் அல்-கைரிய்யஹ் உலகம் உள்ளளவும் உயர்ந்து நிற்க வேண்டும்! உன்னத பணி புரிய வேண்டும்! ஆலிமாக்கள், ஹாஃபிலாக்களை அள்ளி அள்ளி அவனிக்கு வழங்க வேண்டும்! அருளாளன் அல்லாஹ்வின் அளவற்ற அருள் அதனைப் புடைசூழ்ந்து நிற்க வேண்டும்! அதன் வளர்ச்சிக்காய் உழைத்த, உழைத்து வருகின்ற, உழைக்கவிருக்கின்ற அனைத்து பெருந்தகைகளுக்கும் ஈருலக நற்பாக்கியங்களும் நிரப்பமாகக் கிடைக்க வேண்டும்!

229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1428.08.04
2007.08.18

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page