Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

அக்குறணை பரீரஹ் மகளிர் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


குறிஞ்சி நிலத்தில் பூர்வீக முஸ்லிம் மண் அக்குறணையில் குளுகுளுவென ரம்மியமாய் வீசும் தென்றல் மேனிகளில் ஸ்பரிசிக்க மனைகள்தோறும் மறை நிழலில் மங்கையரை வாழ்வாங்கு வாழவைக்கும் கலப்பற்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டு வருடங்கள் ஐந்து உருண்டோட ஒன்பது ஆலிமாக்களையும், இரண்டு ஹாஃபிலாக்களையும் உற்பத்திசெய்து சமூகத்திடம் சமர்ப்பிக்கும் நிகழ்வுகளை வரலாற்று ஆவணமாக்கிவைக்கும் பொருட்டு பரீரஹ் அரபுக் கல்லூரி வெளியிடும் நினைவு மலரில் எனது குறிப்புகளையும் உணர்ச்சி ததும்ப, மகிழ்ச்சி பொங்க பதிவுசெய்து வைப்பதில் அகமகிழ்கின்றேன்.

அறிவு தேடுவதை ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவர் மீதும் கடமையாக்கிய மார்க்கம்தான் இஸ்லாம். ஆண் மாணவர்களின் சன்மார்க்க அறிவுத் தாகத்தை தீர்த்துவைப்பதில் அதீத கரிசனை காட்டப்படும் இந்நாட்களில் மாணவிகளின் சன்மார்க்க கல்வித் தாகத்தை தீர்த்துவைப்பதிலும் பரவலான கரிசனை காட்டப்படுகின்றது. இலங்கை தீவின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் பெண்களுக்கான பிரத்தியேக அரபு மத்ரஸாக்கள் இயங்கிவருவது இதற்கு தக்க சான்றாகும். வார்த்தைக்கு வார்த்தை வித்தியாசம் வித்தியாசமான சொற்றொடர்கள், வசனங்கள் மூலம் இம்மகளிர் அரபுக் கல்லூரிகளின் நோக்கம் எழுதப்பட்ட போதிலும் ஏக இலக்கை நோக்கிய ஓர் இலட்சியப் பயணத்தை அவை செய்துவருகின்றன. ஓவ்வோர் இல்லமும் இஸ்லாமிய மனம் கமழும் இல்லமாக மாறுவதே இறுதி இலட்சியமாகும். ஓவ்வொரு பெண்ணும் முஸ்லிம் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, ……… இல்லங்கள்தோறும் இருக்க வேண்டும். இது ‘முஸ்லிம் வீடு’ அல்லது ‘முஸ்லிம் குடும்பம்’ எனும் கருப்பொருள் சார்ந்ததாகும்.

‘ஆவதும் பெண்ணாலே உலகு அழிவதும் பெண்ணாலே’ என்று பாடி வைத்தான் ஒரு பாடகன். உண்மைதான். தாய்க் குலத்தின் செயற்பாடுகள் நல்லவையாய் இருக்கும்போது அதன் நன்மைகளை அவளும் அனுபவிக்கிறாள், அவனியும் அனுபவிக்கிறது. அதன் செயற்பாடுகள் கெட்டவையாய் இருக்கும்போது அதன் தீமைகளை அவளும் அனுபவிக்கிறாள், அவனியும் அனுபவிக்கிறது. இக்கருத்தை தரும் அல்-குர்ஆனிய வசனங்களும், நபிமொழிகளும் ஏராளம் ஏராளம். ஓட்டுமொத்தத்தில் உலகின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்ற ஒரு பலமான சக்தியாக பெண்ணினம் இருக்கின்றது. இருதயத்தை மாரடைப்பு போன்ற பிணிகளில் இருந்து பாதுகாப்பது போன்று மனித குலத்தின் இதயமான பூவையரை ஆன்மீக நோய்களிலிருந்து எப்பொழுதும் பாதுகாப்பாய் வைக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். இப்பிண்ணனியில்தான் மகளிர் சன்மார்க்க அறிவுக்கூடங்கள் வரலாறு நெடுகிலும் இயங்கிவருகின்றன.

நிர்வாகம், கல்வி, ஒழுக்கம் ஆகிய மூன்றும் ஒரு கல்விக்கூடத்தின் ஒன்றோடொன்றிணைந்த முப்பெரும் பகுதிகளாகும். பரீரஹ் அரபுக் கல்லூரி இம்மூன்றிலும் சிறப்புற்று விளங்குவதாக எனக்கு கிடைக்கும் தகவல் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்துகின்றது. 2002இல் நட்டப்பட்ட பரீரஹ் எனும் விதை வெடித்து பூமியை கிழித்துக்கொண்டு வெளிவந்து நாற்றாக, மரமாக உருப்பெற்று பூத்து, காய்த்து முதன்முதல் ஆலிமாக்கள், ஹாஃபிலாக்கள் கனித் தொகுதியை தருகின்ற இத்தருணம் அனைவர் நெஞ்சங்களையும் களிப்புறச்செய்கின்றது. விதை கொடுத்தவர்கள், அதனை நட்டியவர்கள், நீர் ஊற்றியவர்கள், உரம் இட்டவர்கள், வேலி கட்டியவர்கள், கிருமிநாசினி தெளித்தவர்கள் தாம் கஷ்டப்பட்டு மிகுந்த பிரயாசத்துடன் பராமரித்து கண்ணென பாதுகாத்து வளர்த்த விருட்சம் பழம் கொடுப்பதை பார்க்கும்போது நிச்சயம் மகிழ்ச்சியின் உச்சாணிக்கே சென்றிடுவர். அவர் தம் இதயங்களில் பொங்கிப் பிரவகிக்கும் சந்தோஷத்தையும், ஆத்ம திருப்தியையும் முழுமையாக வர்ணிக்க வார்த்தைகளால் முடியாது.

நன்கு திட்டமிடப்பட்ட கல்வி முறையுடன், சீரிய ஒழுக்கத்துடன், சிறப்பான நிர்வாகத்துடன் பரீரஹ் மகளிர் அரபுக் கலாசாலை ஒய்யாரமாக இறுதி நாள் வரை நீடித்து, நிலைத்து கல்வியை ஆயுதமாக, குணத்தை அணிகலனாக, இறையச்சத்தை ஆடையாக, தஃவாவை கடமையாக, இதய சுத்தியை கிரீடமாகக் கொண்ட பல்லாயிரம் ஆலிமாக்களையும், ஹாஃபிலாக்களையும் அகிலத்துக்கு அளிக்க வேண்டுமென்பதே எனது அவாவும் துஆவும்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2007.05.10

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page