Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

பொலன்னறுவை அல்-குல்லிய்யத் அல்-மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


இறை நெறி காக்கும் எழில்மிகு காப்பகம் அல்-குல்லிய்யத் அல்-மஜீதிய்யாவின் இருபதாம் ஆண்டு நிறைவு விழா, மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து நிலைத்திருக்கச் செய்ய உதவும் நினைவு மலருக்கு நயமாக நான்கு வரிகள் எழுதுவதில் பொங்கிப் பிரவகிக்கும் பூரிப்புக்குத்தான் அளவேது.

ஈழத்து அரபுக் கல்லூரிகளுக்கு ஒரு நூற்றாண்டையும் தாண்டிய ஒரு நெடிய சிறப்பான வரலாறு உண்டு. அருள் சுரக்கும் வஹ்யின் கல்வியை வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் ஆழமாகப் போதித்து சன்மார்க்கத்தைக் கற்றுத் தேரிய ஆலிம்களை அவனிக்கு அளித்துவரும் அரபு மத்ரஸாக்களின் பணி அளப்பரியது. மானிட மேம்பாட்டுக்காய் உத்வேகத்துடன் உழைக்கும் உத்தம உலமாப் பெருந்தகைகளை தரணிக்குத் தந்துதவும் தனித்துவமான கைங்கர்யத்தைக் கச்சிதமாகச் செய்து வருபவை. இலங்கை கண்டுவரும் இனிய இஸ்லாமிய எழுச்சியின் பின்புலம்.

ஆட்டுக் குட்டியாய்த் துள்ளிக் குதிக்கும் ஆசைகளையும், ஆர்ப்பரிக்கும் அலைகளாய் மேலெழுந்து வரும் மேலெண்ணங்களையும் கட்டுப்படுத்திய நிலையில் குறைந்த வேதனத்துடன் நிறைந்த சேவை புரியும் புண்ணியவான்களான மத்ரஸாக்களின் போதனாசிரியர்களைப் பாராட்டுவதா? மத்ரஸாக்களின் நிர்வாக இயந்திரத்தை இடையூறு இன்றி இயக்குவதில் அதீத அக்கறையுடன் காரியமாற்றும் கனவான்களான அவற்றின் நிருவாகிகளைப் பாராட்டுவதா? அரபு மத்ரஸாக்களின் அறப்பணிக்காக தமது கஜானாக்களிலிருந்து அள்ளி அள்ளிக் கொடுக்கும் கொடைவள்ளல்களைப் பாராட்டுவதா? அழியாச் செல்வம் அறிவைத் தேடுவதில் கொள்ளை ஆர்வத்துடன் கூடிப் படிக்கும் அவற்றின் மாணாக்கர் கூட்டத்தைப் பாராட்டுவதா?

இரு தசாப்தங்களாய் இறை பணியில் ஈடுபட்டு பல ஆலிம்களை உற்பத்திசெய்து சாதனை படைத்த பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று இருபதாம் வருட நிறைவைக் கொண்டாடும் மஜீதிய்யஹ் தனது இரு தசாப்த வரலாற்றை அசைபோட்டுப் பார்க்கும் இத்தருணம் உண்மையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் தருணம்தான். கடந்த கால வரலாற்றை மனக் கண் முன் நிறுத்தி ஆத்ம திருப்தியடையும் அதே வேளை அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கான இன்னும் ஒழுங்கான உறுதியான திட்டத்துடன் பயணத்தைத் தொடரும் ஒரு மைல்கல்லாக இத்தறுவாய் அமைந்தாலென்ன?

சமூகம் மாறுகிறது. சூழல் மாறுகிறது. சூழ்நிலை மாறுகிறது. சிந்தனை மாறுகிறது. பார்வை மாறுகிறது. இம்மாற்றங்களுக்கேற்றாற் போல் அவற்றுக்கு ஈடுகொடுக்குமாற் போல் கல்வித் திட்டங்களும், போதனா முறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். காலத்தின் தேவைகளை நிறைவேற்றாத, சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத, பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்லாத, சிக்கல்களை அவிழ்க்க உதவாத கல்வியினால் தனி மனிதனோ, சமூகமோ பயனடையப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். ‘கல்வியில் மிகச் சிறந்தது நிலைமைக்குரிய கல்வியாகும்’ என்ற சான்றோர் கூற்று இவ்விடத்தில் கவனிக்கற்பாலது.

வஹ்ய் சார்ந்த பல்வேறு அறிவுத் துறைகளை வலுவாகக் கற்றுத் தேர்ந்த, சத்திய சன்மார்க்கத்தை சமூகத்தின் அங்கங்களுக்கு சரிவரச் சொல்லி புரியவைக்கின்ற பயிற்சி வழங்கப்பட்ட, ஈழத்து மொழிகளில் போதனைகள் செய்யும் திறமை வளர்க்கப்பட்ட, எதைப் பற்றிப் பேசினாலும் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன்வைத்து ஆணித்தரமாக பேசுகின்ற, நானிலத்தின் நாளாந்த நடப்புக்கள் பற்றி அவ்வப்போது தம்மை புதுப்பித்துக்கொள்கின்ற, கல்விக் கேள்விகளில் இடையறாது ஈடுபடுகின்ற, எதனையும் ஆய்வுக் கண் கொண்டு பார்க்கின்ற, காலதேசவர்த்தமானத்தைக் கவனத்தில் கொண்டு தொழிற்படுகின்ற, தூரநோக்கும் சமூக பிரக்ஞையும் இதய சுத்தியும் உன்னத பண்பாடும் நிறையப் பெற்ற ஆலிம்களே இன்றைய காலத்தின் தேவை. சமூகம் இதனைத்தான் இம்மஜீதிய்யாக்களிலிருந்து பெரிதும் எதிர்பார்த்து நிற்கிறது. சமூகத்தின் இப்பாரிய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாத நிலையில் மத்ரஸாக்களின் பணி தொடருமாயின் அரபுக் கல்லூரிகளின் பெயரில் இலட்ச இலட்சமாய் அள்ளிக் கொட்டி என்ன பயன்? எனவே காலத்துக்கேற்ற தரமான கல்வியை வழங்குவதை உறுதிசெய்வது மஜீதிய்யாக்கள் முன்னுள்ள மாபெரும் சமூகக் கடமையாகும்.

மஜீதிய்யஹ் பயிற்சிப் பாசறையில் பக்குவமாய் பயிற்றப்பட்டு பட்டைதீட்டிய வைரங்களாய் ஆலிம்கள் 47 பேர், ஹாபிஃல்கள் 16 பேர் இதுவரை இப்பாருக்கு சமயப் பணியாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் உள்ளங்களில் உவகை பெருக்கெடுக்கின்றது. வெறும் எண்ணிக்கையைவிட தரத்தில் கவனம் செலுத்தி எத்தனை வைரங்கள் என்பதை விடுத்து எவ்வளவு பெறுமதிவாய்ந்த வைரங்கள் என்பதில் கண்ணும்கருத்துமாகவிருப்பது மஜீதிய்யாவின் தொடரான தரம் குன்றா வளர்ச்சிக்கு அதி முக்கியம். ஓய்யாரமாகக் காட்சி தரும் கவின் வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடங்கள் போன்ற பௌதிகக் குணாதிசயங்களை மாத்திரம் மையமாகக் கொண்டு ஓர் அறிவுப்பீடத்தின் தரத்தை மதிப்பிட முடியாது. தரமிகு கல்வி, சிறந்த ஒழுக்கம், சீரிய நிருவாகம் முதலானவையே தர மதிப்பீட்டின் போது முதன்மைப்படுத்தப்படுபவை.

பல ஆண்டுகளாய்ச் சுழன்று கொண்டிருக்கும் மஜீதிய்யாவின் சகடக்கால் உலகுள்ளளவும் சுழன்று சுழன்று பல்லாயிரம் பல்லாயிரம் ஆலிம்களையும் ஹாஃபில்களையும் உருவாக்கித் தர வேண்டுமென வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கக் கையேந்தி நிற்கிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2006.07.15

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page