Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


ஏற்றமிகு சன்மார்க்கக் கல்வியை வனிதையருக்கு வழங்கும் சிறப்பான கைங்கர்யத்தில் ஏழு ஆண்டுகளாக எழுந்து நிற்கும் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் அதன் மூன்றாவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு வெளியிட்டுவைக்கின்ற நினைவு மலரில் எந்தன் இதய உதிப்புகளை பதிவதில் பூரிப்படைகிறேன்.

தீன் கல்வி ஆர்வம், நாட்டம், தேட்டம் கடந்த நாட்களைவிட இந்நாட்களில் மேலோங்கி நிற்பது கண்கூடு. மார்க்கக் கல்வித் தாகத்தை தீர்த்துவைக்க ஈழத்தின் பட்டிதொட்டி எங்கும் பல பத்து மத்ரஸாக்கள். இதில் பெண் பிள்ளைகளுக்கான மத்ரஸாக்கள் வேறு.

பூவுலகில் பூவையர் நல்லறிவு, நற்குண புஷ்பங்களாக புஷ்பித்து மணம் பரப்பி காசினியை கமகமவென நறுமணம் கமழச்செய்யும் பொருட்டு இயங்கிவரும் மாணவியர் மத்ரஸாக்கள் வரிசையில் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் குறைந்த வளங்களுடன் சிறந்த சேவையாற்றிவருவது உண்மையில் மெச்சத்தக்கதாகும். ஏழு வருடங்களில் ஏறத்தாழ 130 மாணவியர் கல்வி பெறும் கல்லூரியாக வளர்ச்சி கண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

தரமான கல்வியை நல்கி, உன்னத ஒழுக்கத்தை ஊட்டி வல்லவர்களான, நல்லவர்களான சன்மார்க்க அறிவாளிகளாக குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத்தின் மாணவிச் செல்வங்கள் மலர வேண்டும். நல்ல பெண்கள் ஊற்று கல்லூரி எனும் அர்த்தம் தரும் வகையில் ‘குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத்’ என இக்கல்லூரி நாமம் சூட்டப்பட்டிருப்பது இதனையே சுட்டி நிற்கிறது.

சமூகத் தளத்தில் பெண்டிரின் பாத்திரம் அலாதியானது, ஆழமானது, சக்தியானது, சத்தானது. பாரினில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் முதன்முதல் பள்ளிக்கூடமாக அமைவது பெண்தான் என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட பரம உண்மையாகும். ஒரு மாது அவளின் இப்பாத்திரத்தை நிறைவாக நிறைவேற்ற அறிவும் ஒழுக்கமும் அவசியத்திலும் அவசியம். அறிவும் ஒழுக்கமும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போன்றவை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

உணவு, உறையுள் ஏற்பாடுகளுடன் இருபத்து நான்கு மணித்தியாலமும் ஒரு வளாகத்துக்குள் கற்போரை தங்கவைத்து கட்டிக்காத்து கல்வி புகட்டுவது நம்மில் சிலர் எண்ணிக்கொண்டிருப்பது போல் லேசுமாசான காரியமல்ல. இதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் யதார்த்தம் புரியும். கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், எதிர்ப்புகள், ஏச்சுக்கள் என பலதும் பத்தும். இவை அனைத்தையும் சவால்களாகவும் சந்தர்ப்பங்களாகவும் ஒருசேர வரவேற்றுக்கொண்டு கல்லூரி இயந்திரத்தை தொய்வின்றி இயங்கச்செய்கின்ற நிருவாகம், அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் உண்மையில் உயர்ந்தவர்கள். இந்த வகையில் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத்தின் நிருவாகிகள், முதல்வர், உபாத்தியாயர்கள், ஊழியர்கள், பரோபகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட சகலரையும் இவ்வினிய சந்தர்ப்பத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி களிப்புறுகிறேன்.

வரலாற்று தொன்மை, பெருமை, பேர், புகழ் ஒருங்கே வாய்க்கப்பெற்ற புத்தளம் நகரில் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் அமையப்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கற்பாலது. புத்தளம் இறைநேசச் செல்வர்கள் வாழ்ந்த, அடக்கப்பட்டுள்ள மண். நல்லறிஞர்கள், சற்குண சீலர்கள் அதன் மீது பாதம் பதித்துள்ளனர். திரும்பிப் பார்க்கும் திசை எங்கும் இறையில்லங்கள் ஒய்யாரமாய் எழுந்து நிற்கும் ஊர். ஏராளமான மக்தப்கள், மத்ரஸாக்களை தாராளமாக தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ள பிரதேசம். சன்மார்க்க கல்வி காலம்காலமாக உயிர் வாழ்ந்துவந்துள்ள பூமி. திவ்விய வரம் ஆரத்தழுவி ஆறு, கடல், குளம், வனம், உப்பளம், வயல், பண்ணை, தென்னை என பல வகைகளிலும் பாக்கியம்பெற்ற வளமான தளம். மத்திமமான சீதோஷ்ன நிலை மகிழ்விக்கும் மனோரம்மியமான இடம்.

அகவை ஏழை எய்துள்ள இந்தக் கல்வி நிலையம் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். அதன் கனிகளை மனித குலம் கொய்ய வேண்டும். அல்லாஹ்வின் அருள் மாரி அதற்கு தொடர்ந்து பொழிய வேண்டும். இது இப்பணிவுள்ள அடியானின் சுருக்கமான வாழ்த்து, உருக்கமான பிரார்த்தனை.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1434.02.13
2012.12.27
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page